வன்முறை கும்பலை சேர்ந்தவரை தப்ப விட்ட சுன்னாக பொலிஸார் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!

பொது மக்களால் மடிக்கிப்பிடிக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த நபரை மக்கள் சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றமை தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

ஏழாலை பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை இரவு புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவித்தனர்.

சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய போது, வன்முறைக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். அதன் போது அக்கும்பலை சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

அதேவேளை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்போது, தம்மால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நபரையும், பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் தமது பாதுகாப்பின் கீழ் சந்தேகநபரை பொறுப்பெடுத்த நிலையில், பொலிஸ் பாதுகாப்பில் இருந்து அந்நபர் தப்பி ஓடியுள்ளார்.

பொலிஸார் வேண்டுமென்றே சந்தேக நபரை தப்பவிட்டனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்களை பொலிஸார் வேண்டும்மென்றெ தப்பிக்கவிட்டனர் என்ற முறைப்பாடு தொடர்பில்  சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் இருவரையும் எதிர்வரும் 08ஆம் திகதி அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில்  முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

அதேவேளை பாதிக்கப்பட்டவர் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com