ஜனாதிபதி கோட்டா பிழையான முன்னுதாரணத்தை காட்டியுள்ளார் – எரான்

ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பிழையான உதாரணமாகிவிடும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் நேற்று அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் நிறைவேற்றும் வகையில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றியபோதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இவ்வாறு கூறினார்.

உலக நாடுகள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் நிலையில் இலங்கை அரசாங்கம் மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை நசுக்குவதில் அதிக கவனம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதேவேளை ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் மூலம் கொரோனா தொற்றினால் ஒருநாளைக்கு உயிரிழக்கும் 200 பேர் என்ற எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்ததா என்றும் எரான் விக்ரமரத்ன கேள்வியெழுப்பினார்.

அரசாங்கம் தனது குறுகிய நோக்கத்திற்காக சுயாதீன நிறுவனங்களை பலவீனப்படுத்தி, நிபுணர் ஆலோசனையைப் புறக்கணித்து, சம்பந்தப்பட்ட அனுபவம் அல்லது புரிதல் இல்லாத இராணுவத்திற்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலம் ஆபத்தான முன்னுதாரணத்தை காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.