இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்திற்கு 40 ரூபாய் வரி ..!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபாய் இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

பெரிய வெங்காயத்திற்கான தேசிய தேவை 2 இலட்சத்து 90 மெட்ரிக் தொன்னாக காணப்படும் நிலையில் தற்போது விவசாயிகளும் பெரிய வெங்காயத்தை அறுவடை செய்வதனால் 2 மாதங்களில் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் சந்தைக்கு விநியோகிகப்படும்.

தற்போது அதை இறக்குமதி செய்தால் உள்நாட்டு விவசாயிகளுக்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதன் காரணமாக குறித்த விடயம் நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, 40 ரூபாய் இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டது என கூறினார்.

உள்நாட்டு விவசாயிகளை பலப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

எதிர்வரும் இரு மாதங்களுக்கு பெரிய வெங்காய செய்கையில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர்களின் உற்பத்திக்கு சிறந்த விலை கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.