ஆப்கான் விமான நிலையத்தில் ஒரே இரவில் மூன்று ரொக்கெட்டு தாக்குதல்கள்

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியிலுள்ள கந்தஹார் விமான நிலையத்தில் ஒரே இரவில் குறைந்தது மூன்று ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சனிக்கிழமை இரவு விமான நிலையத்தை இலக்கு வைத்து மூன்று ரொக்கெட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் இரண்டு விமான ஓடுபாதையில் மோதியது.

இதன் காரணமாக விமான நிலையத்தில் இருந்து அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டன என்று விமான நிலைய தலைவர் மசூத் பஷ்டூன் ஏ.எப்.பி. செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

ஓடுபாதையை சரிசெய்யும் பணி நடந்து வருவதாகவும், விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பஷ்டூன் மேலும் கூறினார்.

அதேநேரம் காபூலில் உள்ள சிவில் ஏவியேஷன் ஆணையத்தின் அதிகாரி ஒருவவரும் ரொக்கெட் தாக்குதலை உறுதி செய்தார்.

ஆப்பானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறி வரும் நிலையில், நாடு முழுவதும் தலிபானியர்கள் தாக்குதல்களை விரைவுபடுத்தியுள்ளனர்.

தலிபான்கள் மேற்கில் ஹெராத் மற்றும் தெற்கில் லஷ்கர் காஹ் ஆகிய இரண்டு மாகாண தலைநகரங்களை கைப்பற்ற நெருங்கியதால் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.