தமிழர்களின் கடல் வளத்தை சூறையாடும் சிங்களவர்கள்: ஆட்டத்தை ஆரம்பித்துள்ள கோத்தா அரசு

முல்லைத்தீவு – கொக்கிளாய் மற்றும், நாயாறு உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், நாயாறு உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோத தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக சுருக்குவலை, டைனமெற், வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் இவ்வாறான சட்டத்திற்கு முரணான கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனால் எமது பகுதி மீனவர்கள மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு முன்னர், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்கள் தமது தொழிலை மிகவும் சிறப்பாக மேற்கொண்டுவந்துள்ளனர். தற்போது அதிகரித்துள்ள வெளிமவட்டத்தவர்களின் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுளால், மாவட்டத்திலுள்ள மீனவர்களின் கடற்றொழில் மிகவும் வீழ்ச்சியடைந்துவரும் நிலையினையே காணமுடிகின்றது.

இதனை உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியிருந்தும், இதுவரையில் இதுதொடர்பில் உரியதரப்பினர் எவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. எனவே கடற்றொழிலுடன் தொடர்புடைய அமைச்சர், உரிய அதிகாரிகள் இவ்விடயத்தை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com