சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் உயர்தரப் பரீட்சை நேர அட்டவணை பொய்யானது!

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் உயர்தரப் பரீட்சை தொடர்பான நேர அட்டவணை பொய்யானது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி உள்ளடங்களான நேர அட்டவணையொன்று தற்போதைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் அது பொய்யானதொரு நேர அட்டவணை என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

உயர்தரப்பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை மாத்திரம் பின்பற்றி பொறுப்புடன் செயற்படுமாறு பாடசாலை சமூகம் உள்ளிட்ட அனைவரையும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையில் நாட்டில் ஒட்டுமொத்த கல்வி நடவடிக்கை தொடர்பில் மிகவும் தூரநோக்குடனேயே தீர்மானங்கள் எடுக்க வேண்டியுள்ள நிலையில் சமூகத்தினை திசை திருப்புவதற்காக சில தரப்பினர் இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்புவது வருந்தத்தக்கது என பரீட்சை ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் குறித்த தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.