கொழும்பு துறைமுக நகர திட்டம் இந்தியாவுக்கே பேராபத்து – கேணல் ஹரிஹரன் கடும் எச்சரிக்கை

கொழும்பு துறைமுகநகரத்தினால் தோற்றுவிக்கப்படக்கூடிய பீதி வெறுமனே தென்னிந்தியாவுக்கு மாத்திரமானதல்ல, முழு இந்தியாவுக்குமானது என கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள அரசியல் பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உண்மையில், வர்த்தகரீதியாக நோக்குகையில் கொழும்பு துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனென்றால், இந்தியாவின் 70சதவீதமான கொள்கலன் போக்குவரத்துக்கள் இந்த துறைமுகமூடாகவே நடைபெறுகிறது. மூலோபாய நிலைவரங்களில், கொழும்பு துறைமுகத்துக்கு நெருக்கமான சீனப்பிரசன்னம் வித்தியாசமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

ஆனால், அதையும் விட கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு.வர்த்தகமும் வாணிபமும்,தொலைத்தொடர்பும் நிதியியலும் உட்கட்டமைப்புகள் என்று பன்முக சீன நலன்களை கொழும்பு துறைமுகநகரம் சட்டரீதியானவையாக்குகிறது. இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்கத்தை சவாலுக்குள்ளாக்குவதில் சீனாவுக்கு ஒரு பெரிய அனுகூலத்தை கொடுக்கிறது.

அத்துடன் இது அபிவிருத்தி உதவி என்ற பெயரில் இந்தியாவின் அயலகத்தில் செல்வாக்கை மேம்படுத்த சீனா அதன் ஈடிணையில்லா பணப்பல ஆற்றலை பெருக்கவும் உதவும். இலங்கையில் அதிகரிக்கும் சீன செல்வாக்கு குறித்து பல இலங்கை தலைவர்கள் கவலைப்படவும் செய்கிறார்கள்.

கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மல்கம் ரஞ்சித் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். ” அபிவிருத்தி என்பது நாட்டின் வளங்களை விறபனை செய்வதல்ல…….நாட்டைப் பாதுகாப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்.தயவுசெய்து எமது நாட்டை வேறுநாடுகளுக்கு கொடுக்காதீர்கள்” என்று அவர் கேடடிருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாடு எதுவுமாகவில்லை, சீனாவின் காலனியாக மாறுகிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

விசேட பொருளாதார வலயம் சீனாவுக்கு வர்த்தக, நிதித்துறை நன்மைகளை மாத்திரம் வழங்கவில்லை. ஆனால், அது இந்தியாவின் தொலைத் தொடர்பு கட்டமைப்புகளுடன் தலையீடு செய்து ஒட்டுக்கேட்பதிலும் போர்க்கப்பல்களின் நடமாட்டங்களை அவதானிப்பதிலும் இணையவெளி அச்சுறுத்தலை அதிகரிப்பதிலும் சீனாவின் புலனாய்வு மற்றும் எதிர்ப்புலனாய்வு நடவடிக்கைகளை பெருக்கச்செய்யும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக விசேட பொருளாதார வலயம் இந்திய நலன்களுக்குஎதிரான முகவர்கள் ஊடுருவி செயற்படக்கூடிய வசதியான இடமாக எளிதாக மாறிவிடும் வாய்ப்பும் இருக்கிறது.

கடந்த காலத்தில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஊடாக பாகிஸ்தான்முகவர்களும் பயங்கரவாதிகளும் தென்னிந்தியாவுக்கு அனுப்ப்பட்டார்கள்.

சீனாவின் பணப்பலத்துடன் இந்தியாவினால் போட்டிபோட முடியாது என்பதும் அபிவிருத்தி போட்டாபோட்டியிலும் கூட பிரிவுபிரிவாகவே வெற்றிபெறக்கூடியதாக இருக்கும் என்பதும் வெளிப்படையானதாகும்.ஆனால் , இலங்கையுடனான பொதுவான கலாசார, வரலாற்று உறவுகளை இந்தியாவினால் பலப்படுத்தமுடியும்.

இதுவிடயத்தில், இலங்கையின் அனுகூலத்துக்கு ஏற்றமுறையில் தமிழர்கள் மத்தியில் நீரிணை ஊடான உறவுகளை இந்தியா ராஜீவ் காந்தி யுகத்தின் தலையீட்டு கட்டத்துக்குப் பிறகு பயன்படுத்தவில்லை.