தமிழ் மொழி புறக்கணிப்பு – பகிரங்க மன்னிப்பு கோரினார் சபாநாயகர்

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அதற்காக பகிங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய சுமந்திரன் தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில் தனது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் தனதுரையில் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொழி தெரிவுகள் குறித்து இதற்கு முன்னரும் நாம் இணக்கம் கண்டுள்ளோம், குறிப்பாக அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட அறிக்கையின் மொழி தெரிவுகள் தொடர்பில் இதற்கு முன்னர் கேள்வி எழுப்பப்பட்ட வேளையில், நான் இந்த அறிக்கையின் பிரதியை ஆங்கில மொழியில் பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தேன்.

அதற்கமைய ஒரு சில பிரதிகள் எனக்கு ஆங்கில மொழியில் கிடைத்தாலும் இறுதியாக சபைப்படுதப்பட்டுள்ள அறிக்கையானது சிங்கள மொழியில் மாத்திரமே உள்ளது. இதில் 2043 பக்கங்கள் உள்ளன. மூன்று பாகங்களாக இவை பிரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான இறுவெட்டும் கையளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அறிக்கையில் இறுதிப்படுத்திய பின்னர் தமிழ் மொழியிலும் சில பகுதிகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால் தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற அந்த அறிக்கையையும், சிங்கள மொழி மூலமாக அறிக்கையையும் ஒப்பிட்டுப்பார்த்தேன், அதில் சிங்கள மொழியில் உள்ள அறிக்கையின் சில பகுதிகள் மட்டுமே தமிழில் உள்ளது.

உதாரணமாக இந்த அறிக்கையின் இரண்டாம் பாகம் தமிழ் மொழியில் இல்லை. அதேபோல் 167ஆம் பக்கம் தொடக்கம் 554ஆம் பக்கம் வரையிலும், 572ஆம் பக்கம் தொடக்கம் 608 ஆம் பக்கம் வரையிலும், 667 ஆம் பக்கம் தொடக்கம் 1556 ஆம் பக்கம் வரையிலும், 1565 ஆம் பக்கம் தொடக்கம் 2043 ஆம் பக்கம் வரையிலும் அறிக்கை தமிழில் இல்லை.

தமிழ் எம்.பிக்களுக்கு மட்டும் ஏன் இவ்வாறான சூழ்ச்சி செய்துள்ளனர். இதற்கு யார் காரணம்? நாடாளுமன்ற நிருவாகம் இது குறித்து தெரிந்திருக்கவில்லை, அவர்கள் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை என என்னிடம் தெரிவித்தனர். அதேபோல் இந்த அறிக்கையின் தமிழ் மொழியாக்கம் ஜனாதிபதி செயலணியின் மூலமாக செய்வதாகவும் அவர்கள் கூறினர்.

ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில் எனது சிறப்புரிமை மற்றும் எனது மொழி உரிமையை மீறும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது. 1987 ஆம் ஆண்டி அரசியல் அமைப்பு திருத்தப்பட்ட பின்னர் தமிழும் அரச மொழி என அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின்னர் 35 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் எமது மொழி புறக்கணிக்கப்படுகின்றது. சம உரிமை மறுக்கப்படுகின்றது.

ஆகவே தமிழ் மொழியையும் அரச மொழியாக ஏற்றுக்கொள்ளுங்கள். சிங்களவர்களின் பிரச்சினைகள் தீர்ந்த பின்னர் ஏனைய பிரச்சினைகள் அனைத்தையும் புறக்கணித்து வருகின்றீர்கள்.

ஆகவே இன்றுவரை எமக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழியும் அரச மொழி என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் என சபையில் வலியுறுத்தினார். இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன :- அவ்வாறு ஏதும் தவறு நடந்திருந்தால் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

எனது வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் இந்த பிரச்சினை குறித்து நான் கவனம் செலுத்தி தீர்வு பெற்றுக்கொடுக்கின்றேன் என்றார்.