டெல்டா வைரஸ் ஏனைய பகுதிகளுக்கு பரவாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார அமைச்சர்

இந்தியாவில் தீவிரமாக பரவிய டெல்டா வைரஸ் தொற்றுடன் கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் ஐவர் இனங்காணப்பட்டனர். இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் ஏனைய பகுதிகளில் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 சுகாதார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 இந்த சந்திப்பின் போது டெல்டா வைரஸ் தொடர்பான விடயங்கள் குறித்து அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டது. அதற்கமைய குறித்த பிரதேசத்தை கடும் கட்டுப்பாடுகளுடன் தனிமைப்படுத்தி மாதிரிகளைப் பெற்றுக் கொண்டு டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகளை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

 இதே போன்று தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணுயோருக்கு துரித பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும், தற்போது அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற ஏனைய பிரதேசங்களிலும் இந்த டெல்டா வைரஸ் பரவியுள்ளதா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த பரிசோதனைகளை துரிதப்படுத்துவதற்கு அவசியமான பொருள் மற்றும் மனித வளத்தை குறைபாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க மற்றும் சுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.