வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் கத்தியுடன் நடமாடிய நபர்!

வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் சிறிய கத்தி ஒன்றினை வைத்திருந்த குற்றசாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் நேற்றுமாலை இருதரப்பிற்கிடையில் இடம்பெற்ற முரண்பாட்டினால், பெண்கள் இருவரும், ஆண் ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அவர்களை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்தில் அவர்களது உறவினர்கள் சிலர் ஒன்றுகூடியிருந்தனர்.

இந்நிலையில் வைத்தியசாலை வளாகத்திற்குள் கத்தியுடன் ஒருவர் நிற்பதாக வைத்தியசாலை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டநிலையில், குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் வைத்திருந்த சிறியளவிலான கத்தியினையும் பொலிசார் மீட்டிருந்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.