பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்டவர் சிசிரிவி கமராவால் சிக்கினார்!

மானிப்பாயில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாயில் கடந்த 21 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகல் வேளையில் வீடு உடைத்து 4 தங்கப் பவுண் நகை அபகரிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அருகில் இருந்த சிசிரிவி கமராவில் திருட்டில் ஈடுபட்டவர் தொடர்பில் பதிவு இடம்பெற்றிருந்தது. அதனடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் நேற்று கைது செய்யப்பட்டார். சந்தேக நபரால் திருடப்பட்ட 4 தங்கப் பவுண் நகை யாழ்ப்பாணம் நகரிலுள்ள நகைக் கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நகைக் கடை உரிமையாளர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நாளை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.