சிறுவர் பராமரிப்பு இல்ல சிறுமியை வன்புணர்வு செய்த சிறிலங்கா இராணுவ காவல்துறையைச் சேர்ந்தவர் கைது

இலங்கை இராணுவத்தின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி அம்பகாவத்தை நேற்று (03) உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றைச் சேர்ந்த 14 வயதான சிறுமியை இலங்கை இராணுவ பொலிஸ் பிரிவை சேர்ந்த வீரர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்த இராணுவ பொலிஸ் பிரிவு வீரர் நுவரெலியா பொலிஸாரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நேற்று நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி அம்பகாவத்தை முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே பதில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
துஸ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கருதப்படும் சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த முதலாம் திகதி தான் தங்கியிருந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இவரைக் கண்ட குறித்த இராணுவ பொலிஸ் உத்தியோகஸ்தர் அவரை அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளமை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

குறித்த பெண் சிறுமி தங்களுடைய சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக சம்பந்தப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் அதிகாரிகள் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பிரவில் தமது முறைப்பாட்டை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.