மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம்- கமல்ஹாசன்

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தலில் 72 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கொரோனா சூழலில் இவ்வாறு மக்கள் அணிதிரண்டு  வாக்களித்தமை ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக கமல் கூறியுள்ளார்.

இதற்காக மக்களைப் பாராட்டியுள்ள அவர், அரசிய பிரதிநிதிகளின் பொறுப்பை இது அதிகரிக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இம்முறை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து கடும் பணியாற்றிய அனைவருக்கும் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘தமிழகத்தை சீரமைப்போம்’ என்பது வெறும் தேர்தல் வார்த்தை இல்லையென்றும் இதுவொரு கூட்டுக் கனவு எனவும் தெரித்துள்ள கமல், அதனை நோக்கிய பயணத்தில் ஒருபோதும் விலகல் இல்லை எனக் கூறியுள்ளார்.