சிறிலங்கா கடற்படையினனின் தந்தைக்கும் சகோதரனுக்கும் ஏற்பட்ட நிலை

குருணாகல் – வாரியபொல, நேட்டிய பகுதியில் கடற்படை வீரர் ஒருவரின் தந்தை, சகோதரன் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் ஒன்றின் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களைக் கைதுசெய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பின்னணியில், கொரோனா தொற்றாளரை மறைத்து வைத்திருந்ததாக கூறியே சந்தேக நபர்களால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ். பிரதேசத்தின் கடற்படை முகாம் ஒன்றில் சேவையாற்றும் குறித்த கடற்படை வீரர் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி வீட்டுக்கு விடுமுறையில் வந்து பின்னர் 21 ஆம் திகதி முகாமிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த கடற்படை வீரரின் குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, குழந்தையின் மருந்துகளை எடுத்துக்கொண்டு, கடற்படை வீரரின் தந்தையும், சகோதரும் மோட்டார் சைக்கிள், கடற்படை வீரரின் வீட்டுக்குசென்றுள்ளனர்.

இதன்போதே அங்கிருந்த சிலர், கொரோனா நோயாளிகளை வீட்டில் மறைத்து வைத்துள்ளதாக கூறி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான தந்தையும் சகோதரனும் கனேவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறும் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தாக்குதல் நடத்தியோரை பூரணமாக அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறினர்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் வாரியப்பொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com