ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் – அரசாங்கம் தீவிர நம்பிக்கை!

ஜெனீவா மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

மேலும் எமது நாட்டுக்கு அநீதியாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் சகல நாடுகளுக்கும் விளக்கி வருகிறோம் எனவும் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். தொடர்ந்து கூறுகையில்,

ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கை தொடர்பில் இரு அணிகளாக பிளவு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு சார்பாக சீனா உள்ளிட்ட நாடுகள் இருப்பதோடு இந்தியாவின் நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை.

நான் எந்த நாட்டையும் ஒதுக்கவில்லை. எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்துள்ள பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் எமது நிலைப்பாட்டை கூறியுள்ளோம்.

இந்த யோசனை அநீதியானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த பிரேரணை அநீதியானது என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் அநீதியானது.

இந்த அநீதியுடன் தொடர்புள்ள சகல தரப்பினருக்கும் அது தொடர்பில் விளக்கி வருகிறோம்.

ஆசியாவில் எமது நட்பு நாடாக இந்தியா காணப்படுகிறது. இந்த அநீதியில் இந்தியா பங்காளராகாது என முழுமையாக நம்புகிறோம். பரந்தளவில் நாம் எமது தரப்பு நியாயங்களை முன்வைத்திருக்கிறோம். இறுதி இரு வாரத்தில் மனித உரிமை ஆணையாளரின் கூற்று தொடர்பில் எமது கண்டனத்தை முன்வைக்கிறோம்.

படையினர் யுத்த குற்றம்புரிந்ததாக ஏற்கும் பிரேரணையை மாற்றி திருத்தும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். உலகில் உள்ள பலமான பல நாடுகள் யதார்த்தத்தை உணர்ந்து ஏற்றுள்ளன.

அந்த நாடுகள் எம்முடன் இணைந்து செயற்படுகையில் அரசியல் நோக்கத்திற்காக டயஸ்போராவின் தேவைப்படி செயற்படுவோர் குறித்தும் விளக்கியிருக்கிறோம். அவர்களின் தேவைகளையும் கூறியிருக்கிறோம். இந்தியா நியாயத்தின் பக்கம் இருக்கும் என முழுமையாக நம்புகிறோம் என்றார்.