தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா உறுதி – சுதர்ஷனி

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்குள் சிலருக்கு மாத்திரமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்புவோர் தங்களின் பொது சுகாதார பரிசோதகரின் உதவியுடன் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.