மக்களிற்காக பணியிலிருந்து விலகும் சுகாதார வைத்திய அதிகாரியும் 12 பரிசோதகர்களும்

கொழும்பு மத்திய பிரிவின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி, அவரின் கீழ் செயற்பட்ட 12 பொது சுகாதார பரிசோதகர்கள் தாம் இன்று முதல் பணிகளில் இருந்து விலகி சுய தனிமைப்படுதலில் ஈடுபட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.

கொழும்பில் அதிக கொரோனா தொற்றாளர்களை கண்டறிந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்த வைத்தியர் உள்ளிட்ட குழுவினர், தமக்கு கொரோனா குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு சுகாதார துறையினரிடம் முன்வைத்த கோரிக்கையை, அந்த துறையினர் நிராகரித்துள்ளதன் பின்னணியிலேயே, இவ்வாறு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரிக்கு கடிதம் ஊடாக அறிவித்து விட்டு வைத்தியர் உள்ளிட்ட 13 பேரும் சுய தனிமைப்படுதலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை உள்ளிட்ட கொரோனா தொற்றாளர்கள் அதிகமுள்ள பகுதிகளில் குறித்த வைத்தியரின் கீழான மேற்படி குழுவே கொரோனா தொற்றாளர்களைக் கண்டறியும் பிரதான பணிகளை முன்னெடுத்திருந்தனர். இக்காலப்பகுதியில் அவர்கள் 97 தொற்றாளர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.

தொற்றாளரை அடையாளம் காணல், அவர்களை வைத்தியசாலையில் சேர்த்தல், தொற்றாளர்கள் பழகியவர்களை தனிமைப்படுத்தல், பிரதேசத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக மாதிரிகளை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த வைத்தியரின் கீழான குழுவினரே முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், தமக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து உறுதி செய்து கொள்ள தமது குழுவினரை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மத்திய கொழும்பு பிரதான வைத்தியரும் அவரின் கீழான 12 பொது சுகாதார பரிசோதகர்களும் மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரியை கோரியுள்ளனர்.

எனினும், அவ்வாறான பரிசோதனை அவசியமற்றது எனவும், நோய் அறிகுறிகள் தென்பட்டால் மட்டும் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தலாம் எனவும் குறித்த வைத்தியர் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமது சேவையாளர்களான கொழும்பு 01,11,12,13,14 ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் ஒரு இலட்சத்து 37 ஆயிரம் மக்களின் பாதுகாப்பை கருதி, தமக்கு கொரோனா உள்ளதா என்பதை உறுதி செய்யாத வரை பணிகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ள வைத்தியர் உள்ளிட்ட 13 பேரும் இன்று முதல் சுய தனிமைப்படுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கொவிட் தொற்றை தடுப்பதற்கான ஜனாதிபதி செயலனி, சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆகியவற்றுக்கும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிய , கிரிபத்கொடை – மாகொல பகுதியைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com