விசாரணை அறிக்கையை தலைகீழாக மாற்ற முயற்சிக்கும் அரசாங்கம் – எதிர்க்கட்சிக்கு எழுந்துள்ள சந்தேகம்

அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு, குற்றவாளிகளை நிரபராதிகளாகவும், நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு – எதுல் கோட்டேயில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நீதிமன்ற செயற்பாடுகளை மாற்றி அமைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களை தெளிவுப்படுத்த வேண்டியது எதிர்க்கட்சியின் கடமையாகும்.

இந்நிலையில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அது தொடர்பில் சபாநாயகரிடம் நாம் வினவினால், அதற்கு அவர் தனக்கு இன்னமும் அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என்றே தெரிவித்து வருகின்றார்.

ஆனால் விசாரணை அறிக்கையிலே, பொறுப்புதாரிகளாக எதிர்தரப்பு அரசியல் தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்றத்தினால் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில், அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் ஆணைக்குழுவொன்று ஆராய்ந்து பார்ப்பது நியாயமானதா? என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்று எண்ணுகின்றேன்.

ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது, குற்றவாளிகளை நிரபராதிகளாகவும், நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் காண்பிக்கும் முயற்சியோ இதுவென்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் நாம் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.