குறைமாதத்தில் அகற்றிய சிசு புதைப்பு! – ஆணும் பெண்ணும் கைது!

யாழ்ப்பாணம் – இணுவில், மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இணுவில், மருதனார்மடத்தில் உள்ள விநாயகர் விடுதிக்குச் சென்ற பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்தனர்.

கொக்குவிலைச் சேர்ந்த (21-வயது) பெண்ணும் உடுவிலைச் சேர்ந்த (20-வயது) ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அந்த விடுதியில் தங்கியுள்ளனர். இதன்போது பெண் கருவுற்று சில மாதங்களாகிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் சட்டத்துக்குப் புறம்பாக சிசு அகற்றப்பட்டுள்ளது.

அந்தச் சிசு விடுதியின் முற்றத்தில் புதைக்கப்பட்டுள்ளது. சிசு புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிவானின் உத்தரவைப் பெற்று அதனை மீட்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com