ஆளும் தரப்பிற்குள் முரண்பாடு : பிரதமர் தலையிட்டு சமாதானப்படுத்த இணக்கம்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களுக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை தீர்க்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலையிடுவதாக வாக்குறுதியளித்துள்ளார். 

அத்துடன் இன்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்திற்கு ஜனாதிபதியை கொண்டுவர வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கூறிய கருத்து மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக்கட்சிகள் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அனுமதியின்றி  அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தனித்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி முரண்பட்டமை குறித்தும் ஆளும் கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து முர்ணபடுகளை அடுத்து இந்த விவகாரங்களை தீர்த்து வைக்க பிரதமரை தலையிடுமாறு அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

அரசாங்கத்தின் இவ்வாறான பலவீனமான செயற்பாடுகள் எதிர்கட்சிக்கு வாய்ப்புகளை கொடுக்கும் விதமாக அமைந்து விடும் என சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த விடயங்களில் உடனடியாக தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமரை வலியுறுத்தியுள்ளனர்.

எனவே பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடனும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இரு தரப்பையும் சமாதானப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் இன்றையதினம் அமைச்சரவை கூட்டம் கூடவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

முரண்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ள தாம் விரும்புவதாகவும், அனாவசியமான கருத்து மோதல்களை தவிர்த்துக்கொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல அவசியமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாவும் அவர் கூறினார்.

இந்த அரசாங்கத்தை அமைப்பதில் அமைச்சர் விமல் வீரவன்சவின் பங்களிப்பு அதிகமானது என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மறந்துவிடக்கூடாது என்பதையும் தாம் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.