கவனக்குறைவால் பறிபோனது ஆண் குழந்தை!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை உன்னிச்சைப் பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய இந்திரகுமார் றுஸ்மிதன் என்ற ஆண் குழந்தை, நீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம், நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்து குழந்தையும் அதே வயதுடைய அயல்வீட்டுக் குழந்தையும் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, முற்றத்தில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் மேற்படி குழந்தை விழுந்துள்ளது.

குழந்தையின் அழு குரலைக் கேட்ட தாய் ஓடிவந்து பார்த்தபோது, குழந்தை நீருக்குள் கிடப்பதைக் கண்டெடுத்து, மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது, குழந்தை உயிரிழந்துள்ளதாக, வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிப்புக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி சந்திரவதனா நிஸ்ரமானந்தராசா, சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com