
சிறிலங்கா: நாவலப்பிட்டி நகரத்தின் வர்த்தக நடவடிக்கைகளானது முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கடற்படை வீரர்கள் தங்களது விடுமுறை நாட்களில் நாவலப்பிட்டிக்குச் சென்றிருந்தனர்.
தற்போது குறித்த கடற்படை வீரர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்ட கடற்படை வீரர் ஒருவர் நாலவப்பிட்டியில் தங்கியிருந்த காலப்பகுதியில் நான்கு கடைகளுக்கு விஜயம் செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே நாவலப்பிட்டி வர்த்தகர்கள் சங்கத்தின் தலவர் கித்சிறி கருணாதாசா, நவலப்பிட்டி காவல்துறை மற்றும் வர்த்தகர்கள் சங்க உறுப்பினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளை இவ்வாறு முடக்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து கடைகளையும் மூடி, நாவலப்பிட்டி நகரத்தை கிருமி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பஸ்களும் இப் பகுதிக்கான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்ட இரண்டு கடற்படை வீரர்களும் வெலிசர கடற்படை முகாமுக்கு தற்போது அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டியின் மூன்று பகுதிகளைச் சேர்ந்த எட்டு குடும்பங்கள் நேற்று மாலை மிஹிந்தலை, வவுனியா மற்றும் பம்பைமடு ஆகிய இடங்களில் அமையப் பெற்றுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேநேரம் நாவலப்பிட்டியில் இரு பகுதிகளைச் சேர்ந்த 13 குடும்பங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.