பொங்குதமிழ் தூபிக்குள் போராட்டம் நடத்துபவர்களை சுற்றிவர முட்கம்பி வேலியிடப்பட்டது!

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்குள் எவரும் பிரவேசிக்க கூடாதென தெரிவித்து முட்கம்பியால் வேலி அடைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் ஊழியர்கள் சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கடந்த சிலநாட்களாக பொங்குதமிழ் தூபிக்குள் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றர்.

வவுனியா நகரசபையின் பொது நூலகத்தில் பணியாற்றி வந்த புதிய அரச பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் க.கோல்டன் மற்றும் ஏனைய சில ஊழியர்களே தனக்கு நகரசபை நிர்வாகம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த கோல்டன்-

கடந்த 20 வருடங்களாக பொதுநூலகத்தில் பணியாற்றி வருகின்றேன். நான் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த காலத்தில் சம்பள முரண்பாடு, உள்ளக ஆளணி, நிரந்தர நியமனம் தொடர்பாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தேன். இதன் காரணமாக என்னை பழிவாங்கும் முகமாக எனக்கு நகரசபை நிர்வாகத்தினரால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எனது பணியினை இடைநிறுத்தி என்னை நகரசபை பூங்காவில் சுத்திகரிப்பு பணியில் நகரசபை நிர்வாகம் அமர்த்தியுள்ளது. இதன் காரணமாக எனது பணியின் முன்அனுபவ காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

நகரசபை நிர்வாகம் என்னை பழிவாங்குவதை நிறுத்தி எனக்கு மீண்டும் நூலகத்தில் பணி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அனைத்து ஊழியர்களின் சம்பள முரண்பாடு, உள்ளக ஆளணி வெற்றிடம், நிரந்தர நியமனம் போன்ற கோரிக்கைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து தனியாக போராடி வந்த நகரசபை பணியாளர் க.கோல்டனுக்கு ஆதரவு தெரிவித்து சக தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளதுடன், இரவு பகலாக பேராட்டம் இடம்பெற்றுவந்தது.

இந்நிலையில் இன்றையதினம் காலை போராட்டம் இடம்பெற்றுவரும் பொங்கு தமிழ் தூபியினை சுற்றி நகரசபை நிர்வாகம் முட்கம்பி வேலி அடைத்துள்ளதுடன் அதற்குள் அனுமதியின்றி யாரும் பிரவேசிக்க கூடாது என தெரிவித்து பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நகரசபை தவிசாளர், செயலாளர் ஆகியோர் வந்து எங்களை தகாத வார்த்தைகளால் பேசி இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு தெரிவித்தனர். நாங்கள் காட்சிப்படுத்தியிருந்த பதாதைகளையும், கதிரைகள், உடுப்புகள் என அனைத்தையும் அள்ளிச்சென்றுள்ளதுடன் முட்கம்பி வேலியினையும் அடைத்துள்ளனர்.

நாங்கள் நாய்களை போல தற்போது இருக்கிறோம். இது எமக்கு வேதனையாக இருக்கிறது. நாங்கள் எமது உரிமைகளிற்காகவே போராடினோம். ஏனைய தொழிலாளர்கள் எமக்கு ஆதரவு தர விரும்பும் நிலையில் நிர்வாகத்தின் செயற்பாட்டால் அச்சப்படுகின்றனர். எமது கோரிக்கைகளை இதுவரை எந்த ஒரு மக்கள் பிரதிநிதிகூட வந்து ஏன் என்றும் கேட்கவில்லை. எமக்கான தீர்வு விரைவில் வழங்கப்பட வேண்டும். என்றனர்.