இங்கிலாந்தில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி அனுமதி!

இங்கிலாந்தில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் உலகெங்கிலும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

எனினும் இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாம் பரவல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 33,95,959 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 89,243 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரசும் அங்கிருந்து தான் உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியது. இது அனைத்தும் சேர்ந்து அந்நாட்டு மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்நாட்டின் தேசிய சுகாதார சேவையின் இங்கிலாந்து தலைமை நிர்வாகி சர் சைமன் ஸ்டீவன்ஸ் கூறுகையில்,

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு கொரோனா நோயாளி அனுமதிக்கப்படுகிறார். இதனால், மருத்துவமனைகள் மற்றும் ஊழியர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.