கடற்படை, இராணுவத்தை தொடர்ந்து விமானப்படையையும் தாக்கிய கொரொனா

இலங்கை விமானப்படையிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். விமானப்படையின் இசை வாத்தியப் பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் ஒருவருக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்  அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக, விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க வீரகேசரிக்கு தெரிவித்தார்.

இந் நிலையில் அவருடன் தொடர்புகளில் இருந்த 62 விமானப்படை வீர  வீராங்கனைகள், கட்டுநாயக்க விமானப்படை முகாமின் ஒரு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலும் நாளை அது குறித்த பெறுபேறுகள் கிடைக்கும் எனவும் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க கூறினார்.

இது குறித்து பத்திரிகையொன்றின் கேள்விகளுக்கு பதிலளித்து விடயம் தொடர்பில்  அவர் தெளிவுபடுத்தியபோது,

‘ விமானப்படையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் நாம் கட்டுநாயக்க விமானப்படை முகாமின் ஒரு பகுதியில் அவருடன் தொடர்பில் இருந்தோரை தனிமைபப்டுத்தியுள்ளோம்.

உண்மையில்  தொற்று உறுதியான  விமானப்படை வீரர், ஏற்கனவே எமது கண்கானிப்பின் கீழ் இருந்தவர். வெலிசறை கடற்படை வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, அடிக்கடி வெளியே சென்றுவந்த அவர் உள்ளிட்ட குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டே இருந்தனர். அதிலிருந்தே அவர் கண்டறியப்பட்டிருந்தார்.’ எனக் கூறினார்.

அவருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து உறுதியான சான்றுகள் இல்லாவிட்டாலும்,  அது குறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்து வருவதாக குறூப் கெப்டன் துஷான்  கூறினார்.

‘ உண்மையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற  நிகழ்ச்சியொன்றில், இந்த வீரர் கலந்துகொண்டிருந்தார். அவருடன் இரு கடற்படை வீரர்களும் மற்றொரு விமானப்படையின் பெண் வீராங்கனை ஒருவரும் பங்கேற்றிருந்தனர்.  அங்கு வைத்து இவருக்கு தொற்று ஏற்பட்டதா என சந்தேகம் எழுந்தது.

எனினும்  அந் நிகழ்ச்சியில் பங்கேற்ற  கடற்படையினர் இருவருக்கும், விமானப்படை வீராங்கனைக்கும் கொரோனா இல்லை என பரிசோதனைகளில் தெரியவந்தது.

அதேபோல் அண்மையில், கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட  தொடர்மாடி குடியிருப்புக்களை அண்மித்த பகுதிகளில் இசைக் கச்சேரிகள் நடாத்தப்பட்டன. இதன்போது ஏதும் தொற்று ஏற்பட்டதா என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.’ என  குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அச்சமடைய வேண்டாம் எனவும்,  குறித்த வீரருடன் தொடர்புடைய அனைவரும் உரிய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந் நிலையில் விடுமுறை ரத்து செய்து முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ள  விமானப்படை வீரர்களையும் 14 நாள் கண்காணிப்பில் வைத்து, அதன் பின்னர் கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவசியமான மருத்துவ பரிசோதனைகளும் அவர்கள் குறித்து முன்னெடுக்கப்படும் எனவும் விமானப்படை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com