
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, அலுவலகப் பணியில் இணைந்துள்ள பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கைத் தற்போது தளர்த்துவது ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கைத் தளர்த்த இருப்பதாக பெரும்பாலான நாடுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் ஊரடங்கைத் தளர்த்துவது ஆபத்தானது என்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறும்போது, “கடந்த ஆறு வாரங்களில் நாம் அனைவரும் காட்டிய அதே ஒற்றுமையையும் உறுதியையும் இனி வரும் நாட்களில் காட்ட முடிந்தால், நாங்கள் கொரோனாவை வெல்வோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனினும், உங்கள் பொறுமையின்மையை கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் இந்த மோதலின் முதல் கட்ட இறுதியில் இருக்கிறோம். எல்லா துன்பங்களுக்கு இடையேயும் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்” என்றார்.
மேலும், இரண்டாவது கட்டத்தில் லாக் டவுனைத் தளர்த்துவது ஆபத்தானது. இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் தொற்று மற்றும் உயிரிழப்புடன் பெரும் பொருளாதார சேதமும் ஏற்படும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் மார்ச் மாத இறுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் சிகிச்சை எடுத்து வந்தார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற புனித தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பிறகு முழுமையாக குணமடைந்தார். இந்நிலையில் அலுவலகப் பணியில் இணைந்துள்ள போரிஸ் ஜான்சன் ஊரடங்கைத் தற்போது தளர்த்துவது ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இதுவரையில் 1,54,037 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,794 பேர் பலியாகியுள்ளனர்.
