ஸ்ரீலங்காவில் மீட்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டு துப்பாக்கி!

சம்மாந்துறையில் கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர் கைதாகி இருந்தார்.

கைதான சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸாருக்கு மேலதிக தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து, கடந்த வியாழக்கிழமை சம்மாந்துறை மலையடிக்கிராமம் 1 ஐ சேர்ந்த 38 வயதினையுடைய மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு இரண்டாவதாக கைதான சந்தேக நபர் முன்னர் கைதான சந்தேக நபருக்கு துப்பாக்கி சுடுவது குறித்து பயிற்சி அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் கைதான இரண்டாவது சந்தேக நபர் மீது துப்பாக்கியை சட்டவிரோதமாக மறைத்து வைத்தமை, அதனை பயன்படுத்த உதவி செய்தமை, துப்பாக்கி சூட்டு பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சந்தேக நபரின் இடது கையில் 4 விரல் நீக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அது தவிர பயங்கரவாத குழுக்களுக்கும் கைதான சந்தேக நபர்களுக்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளதா எனவும் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பு எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபரின் வாக்கு மூலத்திற்கமைய மேலும் 3 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் பிரதான சந்தேக நபர் உள்ளடங்குவதாகவும் அவர்கள் செங்கல் வாடி மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து வெளியாகியுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com