தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செந்தூரனைக் காணவில்லை

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரனைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு மயிலதனை இந்து மயானத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரதேச சபை உறுப்பினரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொண்டமனாறு மயிலதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்றிரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர்.

அதுதொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கினர். இன்றிரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட பேர்ஸ் இலிருந்து தேசிய அடையாள அட்டையை வைத்து கோப்பாயைச் சேர்ந்த இலகுநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.

அதன் பின்னர் அவரது மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம், தலைக்கவசம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் தேடி வருகின்றனர். அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியவில்லை என்று உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை கேள்விப்பட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் நேரில் சென்று உள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com