
கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியபடி கிருமிநாசினியை ஊசி வழியாக செலுத்த வேண்டாம் என்று கிருமிநாசினி தயாரிக்கும் முன்னனி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று முன்தினம் வோஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஒரே நிமிடத்தில் கிருமி நாசினி, கொரோனா வைரசை வெளியேற்றுகிறது. எனவே கிருமிநாசினியை ஊசி வழியாக உடலில் செலுத்தும் முறை குறித்து ஆராயப்படவேண்டும்” என யோசனை கூறினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல கிருமி நாசினிகளான டெட்டோல், லைசோல் ஆகியவற்றை தயாரிக்கிற ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கள் கிருமி நாசினிகளை மனித உடலுக்குள் ஊசி வழியாகவோ பிற விதங்களிலோ செலுத்தக்கூடாது. இதில் தெளிவாக இருக்க வேண்டும். எங்களது எல்லா தயாரிப்புகளையும் போல கிருமிநாசினிகளையும், சுகாதார தயரிப்புகளையும் அவற்றை என்ன நோக்கத்திற்காக, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வழிகாட்டி இருக்கிறோமோ, அப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
