
ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளை பளை மக்கள் கிளிநொச்சிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மக்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது தங்களின் அத்தியாவசிய தேவையின் பொருட்டு கிளிநொச்சி நகருக்கு சென்றுவர முடியாத நிலை தொடர்பில் பொது மக்கள் தனது கவனத்திற்கு கொண்டுவந்தமையினையடுத்து யாழ் மற்றும் கிளிநொச்சி படைகளின் கட்டளை தளபதிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதற்கு அமைவாக ஆனையிறவின் ஊடாக சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பளை பிரதேசம் நிர்வாக ரீதியாக கிளிநொச்சி மாவட்டத்திற்குள்ளும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமாக யாழ் மாவட்ட கட்டளை தளபதியின் கீழும் காணப்படுகிறது.
எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது பளை மக்கள் தங்களது நிர்வாக மாவட்டத்தின் நகரான கிளிநொச்சிக்கு சென்றுவர ஆனையிறவு சோதனை நிலையத்தில் உள்ள யாழ் மாவட்ட இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை.
பளையிலிருந்து பொது மக்கள் பிரிதொரு மாவட்டத்திற்கு செல்கின்றனர் என்ற அடிப்டையில் இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டது. அத்தோடு மறுபுறமாக பளை மக்கள் யாழ்ப்பாணத்திற்கும் செல்ல முடியாது அனுமதி மறுக்கப்பட்டிருந்து.
இதனால் மாவட்டச் செயலகம், மாவட்ட வைத்தியசாலை, நீதிமன்றம், மற்றும் நகரில் உள்ள தங்களின் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு என எதுவும் செய்ய முடியாத நிலை காணப்பட்டது.
எனவே இது தொடர்பில் நான் யாழ் மற்றும் கிளிநொச்சி படைகளின் தளபதிகள் இருவருடன் பேசியதற்கு அமைவாக பளை பிரதேச மக்கள் தங்களின் அடையாள அட்டையுடன் அதாவது அடையாள அட்டையில் பளை என குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அதனை காண்பித்தும், பளையில் நிரந்தரமாக வசித்தும் அடையாள அட்டையில் பிரிதொரு இடம் குறிப்பிடப்பட்டிருந்தால் அவர்கள் தங்கள் கிராம அலுவலரின் கடிதத்துடனும் கிளிநொச்சி நகருக்கு சென்று வர முடியும் இதற்கான அனுமதியினை ஆனையிறவு சோதனை நிலையத்தில் உள்ள படையினருக்கு இராணுவ உயரதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.