வடக்கில் மாவீரர்நாள்; தெற்கில் பிக்குகளுக்கு விசாரணை – கொதிக்கிறது சிங்கள ராவய!

நாட்டை அழித்த புலிகளின் மாவீரர் தினத்தை வடக்கில் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், ஒரு அறிக்கைக்காக பௌத்த பிக்குவிடம் 24 மணித்தியாலத்தில் குற்றப்புலனாய்வுப்பிரிவு அறிக்கை பெறுகிறது. இந்த நாட்டில் ஒரே சட்டமா நடைமுறையில் உள்ளது என கேட்க விரும்புகிறோம். இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது சிங்கள ராவய அமைப்பு.

அந்த அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர் தெஹிவளையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது,

” நாட்டை வழிநடத்தும் தவறான விடயங்களைச் சுட்டிக் காட்டுவது பிக்குகளின் கடமை. அதைப் பொறுத்துக் கொள்ளாமல் அவர்களை அடக்கப் பார்க்கிறார்கள். ஒரே நாடு, ஒரே சட்டம் என்கிறார்கள். ஆனால் தேரர் ஒருவரிடம் 24 மணி நேரத்தில் அறிக்கை ஒன்றைப் பெற சி.ஐ.டி எத்தனித்தது.

ஆனால் வடக்கில் மாவீரர் தினத்தைக் கொண்டாடி புலிகளை நினைவு கூறுகிறார்கள். ஒற்றையாட்சி நாட்டில் உள்ள பொதுவான சட்டத்தைத் தவிர, பௌத்தர்கள், தமிழர்கள், முஸ்லிம்களுக்கென தனித்தனிச் சட்டங்களா நாட்டில் உள்ளது. சக்தி இல்லாத போது இருந்த மூளை, சக்தி இருக்கும் போது அரசு மூளையில்லாத மாதிரியே செயல்படுவதாக நாம் உணர்கிறோம்” என்றார்.